தூத்துக்குடி
தூத்துக்குடியில் காங்கிரசார் சாலை மறியல்:31 பேர் கைது
|தூத்துக்குடியில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராகுல்காந்தி மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சாலை மறியல்
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி, குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை குஜராத் ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரசார் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள், மாநில அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் மகேசுவரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பக கனி, மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், செந்தூர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், மார்க்கஸ், சின்ன காளை, சீனிவாசன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.
கைது
இந்த மறியல் காரணமாக பாளையங்கோட்டை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த மத்தியபாகம் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பாக காணப்பட்டது.
கோவில்பட்டி
இதேபோன்று, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ அணி மாவட்ட தலைவர் மாறன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, உமாசங்கர் மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகராஜா, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரன், மாவட்டச் செயலாளர் ஜோஸ்வா, எஸ்சி எஸ்டி பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட நிர்வாகிகள் டி. ராஜா, ஜோஸ்வா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும், உடன்குடி மெயின்பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.