சென்னை
மத்திய பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
|மத்திய பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்தும், மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமை தாங்கினார். அவர்பேசுகையில், ''சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தப்படுவதால் மாணவர்களின் கல்விக்கு பா.ஜ.க. அரசு தடையை ஏற்படுத்துகிறது. அதேபோல இதுவரை மத்திய பல்கலைக்கழகங்களில் 3,011 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.
எனவே இதையெல்லாம் உடனடியாக நிறைவேற்றி தரக்கோரி காங்கிரஸ் தொடர்ந்து போராடும்'', என்றார். வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. அசன் மவுலானா உள்பட பலர் கலந்து கொண்டனர்.