அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
|இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வரும் 27-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அறைகூவல் விடுத்திருக்கிறது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வருகிற 27-ந்தேதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.
இந்நிலையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.