திருநெல்வேலி
மணிப்பூர் குற்றவாளி உருவபொம்மையை தூக்கிலிட்டு காங்கிரசார் போராட்டம்
|நெல்லையில் மணிப்பூர் குற்றவாளி உருவபொம்மையை தூக்கிலிட்டு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இருபிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டு தொடர் மோதல்கள் நடைபெற்றன. அங்கு 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து ெசன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான கொடூர சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை அந்த மாநில போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக மாடியில் நேற்று மணிப்பூர் குற்றவாளியின் உருவபொம்மையை தூக்கிலிட்டு நூதன போராட்டம் நடந்தது. மாடியின் வெளியே நீட்டியவாறு வைக்கப்பட்ட கம்பில் குற்றவாளியின் உருவ பொம்மையை கயிற்றில் தூக்கிலிட்டவாறு காங்கிரசார் தொங்க விட்டனர். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
உடனே பாளையங்கோட்டை போலீசார் விரைந்து வந்து காங்கிரஸ் அலுவலக மாடிக்கு செல்ல முயன்றனர். ஆனால் அலுவலகத்தின் முன்பக்கம், பின்பக்க வாசல்கள் பூட்டப்பட்டு இருந்ததால் போலீசாரால் அங்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து அலுவலகத்தின் மாடியில் இருந்து தொங்க விடப்பட்ட மணிப்பூர் குற்றவாளி உருவபொம்மையை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் துள்ளி குதித்து பிடித்து இழுத்து பறிமுதல் செய்தார். தொடர்ந்து மத்திய அரசைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை கலைத்து விட்டு ராணுவ ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தியும் காங்கிரசார் கோஷங்களை எழுப்பினர்.