< Back
மாநில செய்திகள்
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு:  வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரசார் போராட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரசார் போராட்டம்

தினத்தந்தி
|
19 May 2022 1:52 PM GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரசார் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரசார் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறவழி போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் நேற்று வாயில் வெள்ளை துணி கட்டி அறவழி போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு கொலையல்ல என்ற வாசகத்துடன் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.டி.செல்வராஜ், வட்டார தலைவர்கள் தங்கராஜ், இளங்கோ, ஜெகநாதன், குப்புசாமி, சொக்கலிங்கமூர்த்தி, ரெங்கசாமி, நகர காங்கிரஸ் தலைவர் மோகன், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் முரளி, மாநில மகளிர் காங்கிரஸ் துணை செயலாளர் மகேஸ்வரி உள்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்

பரமத்தி வட்டார காங்கிரஸ் சார்பில் பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகே பேரறிவாளனை விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாயில் வெள்ளை துணியை கட்டி அறப்போராட்டம் நடந்தது. பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சி சந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் நகர செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் வன்முறையை எதிர்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை தீர்வாகாது என கோஷமிட்டனர்.

இதில் பரமத்தி வட்டார காங்கிரஸ் துணை தலைவர் காளியப்பன், கபிலர்மலை வட்டார தலைவர் நடராஜ், பொத்தனூர் நகர தலைவர் வடிவேலு, வெங்கரை நகர தலைவர் ஹரிகிருஷ்ணன், விவசாய அணி தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்