கடலூர்
காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
|ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடியானதை கண்டித்து விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம்,
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோா்ட்டு உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை குஜராத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதைகண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நகர தலைவர்கள் விருத்தாசலம் ரஞ்சித்குமார், மங்கலம்பேட்டை வேல்முருகன், வட்டார தலைவர்கள் ராவணன், சாந்தகுமார், பீட்டர், முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புலியூர் ராஜவேல், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய்சங்கர், ராமராஜன், மகளிர் காங்கிரஸ் சரசு, லாவண்யா, அரசாயி மற்றும் நிர்வாகிகள் நேற்று மதியம் 12 மணியளவில் விருத்தாசலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் திரண்டனர்.
எம்.எல்.ஏ. கைது
அந்த சமயத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோர்ட்டு தீர்ப்பை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், ரெயில்வே இருப்பு பாதை போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் உள்பட 30 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.