காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல - கே.எஸ்.அழகிரி
|காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்று பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.அழகிரி பேசினார்.
71-வது பிறந்தநாள் விழா
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி, 'காங்கிரசும் மதசார்பின்மையும்' என்ற தலைப்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவுக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். அகில இந்திய எஸ்.சி. பிரிவு தலைவர் ரஜேஷ் லிலோதியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் 71 கிலோ கேக் வெட்டப்பட்டது.
விழாவில், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
இந்துக்களுக்கு எதிரானது அல்ல
விழாவில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது என்றும், இந்து மதத்தை குறை கூறுவதும், சிறுமைப்படுத்துவதும் நேருவின் பழக்கம் என்றும் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. காங்கிரஸ் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உடைய ஒரு அரசியல் கட்சி.
நேருவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் ஒரு சீர்திருத்தவாதி. ஆனால் இந்து மதத்துக்கு எதிராக அவர் செயல்பட்டது இல்லை.
அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சி
காந்தி நான் ஒரு இந்து, ராமனை வழிபடுகிறேன். ஆனால், அதை அடுத்தவரிடம் திணிக்கமாட்டேன் என்று கூறினார். இதுதான் காங்கிரசின் தத்துவம். இதுதான் மதச்சார்பின்மை. பிரிவினைவாதம் பேசுபவர்கள், மதத்துக்கு எதிராக பேசுபவர்கள், மொழி எதிர்ப்பு பேசுபவர்கள், இன உணர்வுகளை கிளப்புபவர்கள் காலப்போக்கில் தோல்வியடைவார்கள்.
நாட்டின் பிரதமராவது மட்டும் ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தையே மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.
அரசியல் சாசனத்தை காப்பாற்றவும், மதசார்பின்மையை காக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நல உதவிகள்
விழாவில் மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, ரங்கபாஷ்யம், காண்டீபன், தளபதி பாஸ்கர் மற்றும் மாநில-மாவட்ட நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரிக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.
கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளியவர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. மாலையில் கருத்தரங்கம் நடைபெற்றது.