நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான்- குஷ்பு விமர்சனம்
|கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என குஷ்பு கூறினார்.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்கு பா.ஜனதா நிர்வாகியான நடிகை குஷ்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அவர் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வினை கொண்டு வந்தது காங்கிரஸ். நீட்டை மாநிலத்தில் இருந்து எடுக்க முடியாது என நீதிமன்ற வாசலில் இருந்து கத்தி பேசியவர் நளினி சிதம்பரம். நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், அது என்ன விருப்பப்பட்டால் மாநில அரசு நடத்திக் கொள்ளலாம் என குறிப்பிடுகிறது. நீட் இல்லை என்று அவர்களால் சொல்ல முடியுமா?.
தேர்தலுக்காக நீட் விவகாரத்தை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது காங்கிரஸ். இது மக்களை ஏமாற்றும் செயல். கல்விக்கொள்கையில் தேசிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும். கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.
இந்த சூழ்நிலைக்கு காங்கிரசும், தி.மு.க.வும் தான் காரணம். ஆனால் தேர்தலுக்காக மறைத்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றனர். அருணாச்சல பிரதேச சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர்கள் பரப்பி வருகின்றனர்" என்றார்.