காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்க காங்கிரஸ்-தி.மு.க. சதி : தமிழக பா.ஜ.க. குற்றச்சாட்டு
|காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்க காங்கிரஸ்-தி.மு.க. சதி செய்வதாக தமிழக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை,
தமிழக பா.ஜ.க. துணை தலைவர் திருப்பதி நாராயணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, 'தண்ணீர் தரக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. தண்ணீர் திறக்காவிட்டால், நீர்த்தேக்கங்களை மத்திய அரசு கைப்பற்ற முடியுமா?, நீதிமன்ற அவமதிப்பாக இதை கருத முடியுமா? என்ற கோணத்தில் ஆலோசனை நடைபெறும்' என்று கூறியிருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தபோது, உண்மையை சொல்லி அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இரு மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினையும் எழவில்லை. இப்போது மட்டும் மத்திய அரசுக்கு எதிராக பேசி, மொழி ரீதியாக, மாநில ரீதியாக காங்கிரஸ் அரசு பதற்றத்தை உருவாக்குவது முறையல்ல.
நாடாளுமன்ற தேர்தல் வரும் வேளையில், கர்நாடக மக்களை மொழிரீதியாக, மாநில உணர்வுகளை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து அதன் மூலம் அகில இந்தியளவில் பதற்றத்தை தூண்ட முயற்சித்து, சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி மாநில அரசை கலைக்க முடியுமா? என சவால் விடுகிறது காங்கிரஸ். அதற்கு தி.மு.க. துணை நிற்கிறது. அதிகாரத்துக்கு வருவதற்காக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்கும் சதித்திட்டமே தற்போதைய காவிரி விவகாரம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.