மதுரை
புதிய பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு பாராட்டு
|தமிழக அரசு அறிமுகப்படுத்திய புதிய பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த மதுரை மாணவருக்கு பாராட்டு ெதரிவிக்கப்பட்டது
மதுரை,
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவு மாணவர் மாதவன் நடந்து முடிந்த அரசுப் பொதுத்தேர்வில் தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புத்திறன்கள் என்ற பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். வேலைவாய்ப்புத்திறன் என்ற பாடம் இந்த கல்வியாண்டில் (2022-2023) அரசால் அறிமுகபடுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் ஆகும். மாணவ, மாணவிகள் தங்களை புரிந்து கொண்டு, ஆங்கில மொழித்திறன், தகவல் தொடர்புத்திறன், மின்னனு திறன்கள், தொழில் முனைவு, நிதி கல்வியறிவு போன்ற நவீன காலத்துக்கு தேவையான திறன்களை வளர்த்து கொள்வதற்கும், வேலைவாய்ப்பு சார்ந்த உலகத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவதும் இந்த பாடத்தின் நோக்கமாகும். இதற்கிடையே, மாநில அளவில் சாதனை படைத்த மாணவனுக்கு மதுரை ஆர்.டி.ஓ. ஷாலினி நேரில் சென்று புத்தகம் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் பள்ளியின் தலைமைஆசிரியர் ஷேக் நபி ஆகியோர் கலந்து கொண்டனர்.