< Back
மாநில செய்திகள்
கடுமையான சமயத்தில் திறம்பட செயல்பட்ட விமானிகளுக்கு வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

கடுமையான சமயத்தில் திறம்பட செயல்பட்ட விமானிகளுக்கு வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
11 Oct 2024 10:15 PM IST

விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.

தீப்பற்றுவதை தடுக்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்குவது என விமானிகள் திட்டமிட்டனர். அதற்காக விமானம் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக வானத்திலேயே வட்டமடித்தது. ஒருபுறம் சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில், 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 26 முறை வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 8.15 மணியளவில் பெல்லி லேண்டிங் முறையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் பயணிகளும், அவர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா AXB613 விமானம், தொழில்நுட்பக் கோளாறால் கடந்த சில மணி நேரங்களாக திருச்சி விமான நிலையத்தைச் சுற்றிய வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது; பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றேன்.

கடுமையான சமயத்தில் திறம்பட செயல்பட்டு அனைத்து பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்