திருநெல்வேலி
பஸ், ரெயில்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
|நெல்லையில் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
விடுமுறை நாட்கள்
தமிழ்நாடு பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மிலாடி நபி, காந்தி ஜெயந்தியால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சென்னை கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். அவர்கள் உற்றார் உறவினர் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா ஸ்தலங்களுக்கும் சென்று வந்தனர்.
இந்தநிலையில் விடுமுறை முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படுகிறது. மேலும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் இன்று முதல் செயல்பட உள்ளது.
இதையொட்டி நேற்று நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பினார்கள்.
கூட்டம் அலைமோதியது
இதனால் நெல்லை சந்திப்பு ெரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாலை 5 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்ட அந்தியோதயா ரெயிலில் பயணிப்பதற்காக முதலாவது நடைமேடையில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர். ரெயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றவுடன் ஒரே நேரத்தில் ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்தனர். ஆனால் ஏற்கனவே அந்த ரெயிலில் நாகர்கோவிலில் முழுமையாக பயணிகள் நிரம்பி விட்டனர். நெல்லையில் ஏறிய பயணிகள் பெரும்பாலானோர் லக்கேஜ் கேரியரில் அமர்ந்தும் நடைபாதை, படிக்கட்டுகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் பயணம் செய்தனர்.
இதுதவிர நெல்லையில் இருந்து இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், நெல்லை வழியாக இயக்கப்படும் கன்னியாகுமரி, அனந்தபுரி உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலில் பலர் இருந்தனர். அந்த ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிளில் ஏராளமான பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தனர்.
புதிய பஸ்நிலையம்
அது தவிர நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கிருந்து மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏறினார்கள். அப்போது போக்குவரத்து கழக அதிகாரிகள் கூட்டம் அதிகமாக இருந்த ஊர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்கினர்.
ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பயணிகள் கோரிக்கை
இதுகுறித்து பயணி மீனா கூறியதாவது:-
விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தோம். இங்கே ெரயில்களில் ஏற முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே விடுமுறை காலங்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து கூறுகையில், "இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்கள், திருவிழா காலங்களில் தெற்கு ரெயில்வே கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும். மேலும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத பொது பெட்டிகள் எண்ணிக்கயை அதிகரிக்க வேண்டும்" என்றார்.