காங். தலைவர் மரணம்: விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
|தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
இரண்டு நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஜெயக்குமார் தனசிங்கை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பிட்ட சில நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெயக்குமார் தனசிங் கடந்த 30-ம் தேதியே அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கே, இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.
பலமுறை சுட்டிக்காட்டியும், கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை, ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மட்டுமே செயல்படுவதன் விளைவாக, தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, இனியாவது பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்யவும், கைது செய்யவும் மட்டுமே காவல்துறையை பயன்படுத்தாமல், உரிய சுதந்திரத்தை வழங்கி சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தடுக்கவும் பயன்படுத்துவதோடு, ஜெயக்குமார் தனசிங் மரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.