சிலரின் தவறான புரிதலால் குழப்பம்: பெண்கள் இட ஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை - கி.வீரமணி விளக்கம்
|பெண்கள் இட ஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2 நாள்களுக்கு முன் வந்த சென்னை ஐகோர்ட்டின் முதலாம் தலைமை நீதிபதி அமர்வு-பெண்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அளித்துள்ள ஒரு தீர்ப்புப்பற்றி சிலரது தவறான புரிதல் அறிக்கைகளாலும், ஏதோ தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இட ஒதுக்கீடே செல்லாது என்று தீர்ப்பளித்ததுபோல ஒரு கருத்து பரப்பப்பட்டுள்ளது.
முழுத் தீர்ப்பினைப் படித்ததும் சில விளக்கங்கள் தெளிவாகியுள்ளன. அடிப்படையில் செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இனிவரும் காலங்களில் தேர்வுகளில், குறைபாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றுதான் அத்தீர்ப்பு கூறியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இட ஒதுக்கீடே செல்லாது என்று கூறப்படவில்லை. இட ஒதுக்கீடு அளித்த முறையில் ஏற்பட்ட குறைபாட்டை சீர்மை செய்யவே அத்தீர்ப்பு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.