கரூர்
தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா? என வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் கருத்து
|6 இலக்க எண்களுடன் ஹால்மார்க் கட்டாயம் என்பதால் தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா? என வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க, 1947-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஐ.) உருவாக்கப்பட்டது. பெருகிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 1986-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைவனச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது 1987-ல் இந்திய தரநிர்ணய அமைப்பாக (பி.ஐ.எஸ்.) மாற்றம் செய்யப்பட்டது.
நோக்கம்
பொருட்களின் தரத்தை தேசிய அளவில் நிர்ணயம் செய்து தரச் சான்றிதழ் வழங்குவதுடன் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, சர்வதேச அளவில் இந்திய பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் அளித்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உறுதுணையாக இருப்பது போன்றவைதான் அதன் நோக்கம் ஆகும்.இவ்வாறு பல்வேறு உலோகப் பொருட்கள், உணவுப் பொருட்களுக்கு எல்லாம் தரநிர்ணயம் செய்யப்பட்ட போதிலும் தங்கத்திற்கு மட்டும் தரநிர்ணயம் செய்ய போதுமான வழிமுறைகள் செய்யப்படாமல் இருந்து வந்தது.
சேதார இழப்பு
தங்கத்தைப் பொறுத்த அளவில் 24 கேரட் சுத்தத் தங்கத்தை நேரடியாக அணிகலன்களாக செய்ய முடியாது. அதனுடன் செம்பு மற்றும் வெள்ளி போன்ற பிற உலோகங்களை கலந்து 22 கேரட் அளவிற்கு தங்கத்தை மாற்றம் செய்த பிறகே அதனை வளைத்து நெளித்து மக்கள் விரும்பும் வகையிலான அணிகலன்களை செய்ய முடியும்.
இதனை பயன்படுத்தி தங்கத்தை வாங்கும் மக்களிடம் செய்கூலி, சேதாரம் என கூடுதலான பணத்தை பெற்ற போதிலும், விற்பனை செய்யும் வியாபாரிக்கு வியாபாரி தங்கத்தின் தரம் வேறுபட்டே காணப்பட்டு வந்தது.
உதாரணமாக ஒரு வியாபாரியிடம் வாங்கிய தங்க நகையை கொஞ்சநாள் கழித்து விற்பனை செய்கிறோம். அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்குகிறோம். அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? நாம் கொடுத்த நகையில் அதிக அளவில் சேதாரத்தை கழித்து தங்கத்தின் மதிப்பை குறைத்துக் கூறி கூடுதலாக பணத்தை பெற்றுக் கொண்ட பின்னரே புதிய தங்க நகைகளைத் தருகிறார்கள்.
ஹால்மார்க் முத்திரை
இதுபோன்ற பிரச்சினைகளை களைய இந்திய தரநிர்ணய அமைப்பு சார்பில் கடந்த 2000 ஆண்டு முதல் 'பி.ஐ.எஸ். ஹால்மார்க்' என்ற பெயரில் ஹால்மார்க் நிர்ணயம் செய்யும் முறை அமுலுக்கு வந்தது. இதனால், தங்க நகை உற்பத்தியாளர்கள் உருவாக்கும் ஆபரணங்களை இந்திய தரநிர்ணய மையங்களில் காண்பித்து அவற்றின் தரத்தை சோதனை செய்து, ஹால்மார்க் முத்திரையை பெற்று விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இத்தகைய ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மக்கள் மறுவிற்பனை செய்து புதிய வடிவத்தில் நகைகளை பெறும்போது பெரும் அளவில் சேதாரம் கழிக்கப்படாமல் மக்களின் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.
இவ்வாறு ஹால்மார்க் முத்திரையிடப்படும் நகைகளில் 4 அடையாளங்கள் இடப்பட்டு வந்தன. அதில் முதல் அடையாளம் இந்திய தரநிர்ணய அமைப்பு குறியீடு, 2-வது அடையாளம் தங்கத்தின் தூய்மையை குறிக்கும். 3-வது அடையாளம் ஹால்மார்க்கிங் மையத்தையும், 4-வது அடையாளம் தங்க நகையை விற்பனை செய்யும் கடையையும் குறிக்கும்.
தனித்த அடையாள எண்
இந்த நிலையில், ஏப்ரல் 1-ந் தேதி (நேற்று) முதல் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. புதிய முறையில் வழங்கப்படும் ஹால்மார்க் முத்திரையில் 3 அடையாளங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. முதல் 2 அடையாளங்கள் ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தையும், நகையை தயாரித்த கடையையும் குறிக்கும். 3-வது அடையாளமானது 6 இலக்க தனித்த அடையாள எண் (எச்.யூ.ஐ.டி.) ஆகும்.
இந்த 6 இலக்க தனித்த அடையாள எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள 'பிஸ் கேர்' (BIS CARE) செயலியில் சோதனை செய்து பார்க்கும்போது தங்க நகையின் மொத்த தகவலும் தெரிந்துவிடும்.
அதாவது நகைக் கடையின் பெயர், முகவரி, ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் பெயர், நகைக் கடையின் பதிவு எண், ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் அங்கீகார எண், எந்த தேதியில் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டது, ஆபரணத்தின் பெயர் (மோதிரம், கம்மல், செயின்), முக்கியமாக நகையின் தூய்மை மற்றும் கேரட் அளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிந்துவிடும்.
இதன் மூலம் பொதுமக்கள் இனி வாங்கப் போகும் நகையின் துய்மை, தரம் உள்ளிட்ட விவரங்களை நகையை வாங்கும் முன்பே 'பிஸ் கேர்' செயலி மூலம் தெரிந்து கொண்டு நகைகளை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிமுகமாகி இருக்கும் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) கூடிய ஹால் மார்க் முத்திரை பொதுமக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ குழப்பத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது நம்பிக்கை தருகிறதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பார்ப்போம்.
1 கிராம் நகைக்கே ஹால்மார்க் போடுகிறோம்
கரூர் பழனி முருகன் ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.பாலமுருகன்:-
ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் நகைகளுக்கு 6 இலக்க எண் கொண்ட யுனிக் ஐடி வழங்கப்படுகிறது. இந்த யுனிக் ஐடி என்பது ஒவ்வொரு நகைகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்த யுனிக் ஐடி நம்பராகவும், எழுத்துகளாகவும் இருக்கும். இந்த எண்களை மற்ற நகைகளில் போலியாக பண்ண முடியாது. நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நகைகளின் தரம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதான் இந்த யூனிக் ஐடி. இதற்கு முன்பாக நகைகளில் ஹால்மார்க் என்பது பிஐஎஸ் லோகோ, 916, 22 கேரட் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். தற்போது 6 இலக்க எண், பிஐஎஸ் லோகோ, 22 கேரட், 916 பியூரிட்டி ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் பிஐஎஸ் கேர் என்ற ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகைகளில் உள்ள 6 இலக்க எண்களை பதிவு செய்தால், நகை எந்த கடையில் வாங்கியது, எந்த ஹால்மார்க் மையம் தரச்சான்று வழங்கியது, எப்போது வழங்கப்பட்டது. நகையின் கேரட் எவ்வளவு என்ற முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். ஹால்மார்க் நகைகள் மக்களுக்கு தரமான நகைகள் கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. கரூரில் தற்போது 2 ஹால்மார்க் மையங்கள் உள்ளன. கரூரை பொறுத்தவரை இந்த 2 ஹால்மார்க் மையங்கள் என்பது போதுமானதுதான். இதில் ஒரு நகைக்கு ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்படுகிறது. ஆனால் ஹால்மார்க் தர ஆய்வு மையங்களில் ஒரு நகையை கொண்டு சென்று சான்றிதழ் வாங்க 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதிகமான நகைகள் கொடுக்கும் போது ரூ.45 கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
ஹால்மார்க் தர ஆய்வு மையங்களில் நாம் கொண்டு செல்லும் நகைகளை எடுத்து அதில் சிறு பகுதியை கட் செய்து, அதனை டெஸ்ட் செய்துதான் ஹால்மார்க் சான்று வழங்கப்படுகிறது. நகைகளுக்கு சான்று பெறுவதற்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் ஆகிறது. அதனால் காலதாமதம் என்பது இல்லை. 2021-ம் ஆண்டு முதலே இந்த நடைமுறைக்கு மாறிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அதற்கு தகுந்தாற்போல் ஹால்மார்க் நகைகளாக மாற்றிவிட்டோம்.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு நகைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. ஹால்மார்க் என்பது கரூரில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் இருக்கிறது. நமது கடையிலும் உள்ளது. இதனால் விலை கூடுவதற்கோ, இறங்குவதற்கோ வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அதே செயல்முறைதான், தற்போது 6 இலக்க எண்ணை மட்டும் எக்ஸ்ட்ரவாக பதிவு செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஹால்மார்க் என்பது 2 கிராமிற்கு குறைவாக உள்ள நகைகளுக்கு தேவையில்லை என கூறியுள்ளனர். 2 கிராமிற்கு மேலாக செல்லும் போது கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை வேண்டும். ஆனால் தற்போது கடைகளில் 1 கிராம் நகை என்றால் கூட ஹால்மார்க் போடப்பட்டு வருகிறது.
வரவேற்கத்தக்கது
தோகைமலை அருகே உள்ள வடசேரி சேர்ந்த இளம்பெண் மகாலட்சுமி:- நகைக்கடைக்கு சென்று நகையின் தரத்தை கண்டறிவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது மிகுந்த வரவேற்கத்தக்கது.
தற்போது நகைகளில் 6 இலக்க எண்கள் உள்ளதால் யார் வேண்டுமானாலும் நகைக்கடைக்கு சென்று நகைகளை வாங்கலாம். இதுகுறித்து அடித்தட்டு மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பழைய தங்கத்தின் தரத்தை மாற்ற கூடாது
நொய்யல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரேவதி:-
அந்த காலத்தில் பவுனுக்கு தர நிர்ணயம் செய்யப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு இருந்து 916 கால் மார்க் தங்கநகை என உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தற்போது 6 எண்கள் கொண்ட ஹால்மார்க் தங்க நகைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஹால்மார்க் தங்கத்திற்கு எத்தனை எண்களை அறிவித்தாலும் அறிவிக்கட்டும்.
ஆனால் தரம் உள்ள தங்கமாக இருந்தால் சரி. அதே போல் பழைய 916 ஹால்மார்க்தங்கத்தை தரம் குறைந்ததாக அரசு அறிவிக்க கூடாது. அவ்வாறு அறிவித்தால் 916 ஹால்மார்க் தங்கம் வாங்கின அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எண்கள் மட்டுமே மாற்றப்பட வேண்டும் தங்கத்தின் தரத்தை மாற்றக் கூடாது.
அச்சம் இருக்கிறது
வெள்ளியணையை சேர்ந்த இல்லத்தரசி பவித்ரா:-
தங்கத்தை ஆபரணங்களாக செய்யும் போது அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் செம்பு சேர்க்கப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் தான் சேர்க்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியாததால் ஒவ்வொரு கடையிலும் வாங்கும் தங்கத்தின் தரமும் தூய்மையும் மாறுபட்டிருக்கும். இதை கருத்தில் கொண்டு தற்போது அரசு கொண்டுவந்துள்ள ஹால்மார்க் முத்திரை பதியப்பட்ட நகைகளை மட்டுமே கடைகளில் விற்க வேண்டும் என்ற திட்டத்தால் நகையின் தரமும் தூய்மையும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ஹால்மார்க் முத்திரையும் 6 இலக்க எண்ணும் கொடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதனால் திட்டம் வரவேற்க கூடிய ஒன்றுதான்.
ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டு ஒவ்வொரு நாகைக்கும் தனியாக 6 இலக்க எண் கொடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்போது, பொது மக்களிடத்தில் எவ்வளவு நகை இருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள அரசுக்கு முடியும். மேலும் நகை வாங்கும் நமக்கும் தனியாக 6 இலக்க எண் இருப்பதால் நமது நகையை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே நம்மிடம் இருக்கும் நகைகளுக்கு என்ன மாதிரி நடைமுறை பயன்படுத்தப்படும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பழைய நகைகளை வைத்திருப்போரிடையே ஒருவித அச்சம் இருக்கிறது.
குழப்பமான சூழ்நிலை
குளித்தலை மேட்டு மருதுறை சேர்ந்த இல்லத்தரசி சீதாலெட்சுமி:-
தங்க நகைகளில் நேற்று முதல் 6 இலக்க எண்களுடன் ஹால்மார்க் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நகைக் கடைகளில் விற்கப்படும் நகைகளுக்கு உடனடியாக 6 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் உடனடியாக பதிக்கப்படுமா? என தெரியவில்லை. இதுபோன்ற எங்களுடன் கூடிய நகைகளை உடனடியாக வாங்குவது என்பது முடியுமா? என்பது தெரியவில்லை. அதுபோல இந்த 6 எண்கள் பொறிக்கப்படாத நகைகளை வாங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே வீடுகளில் வாங்கி வைத்துள்ள நகைகளை கொடுத்து புதிய நகைகள் வாங்க முயற்சிக்கும் பொழுது பழைய நகைகளுக்கு எவ்வாறான மதிப்பீடு கொடுப்பார்கள் என தெரியவில்லை. வீட்டில் உள்ள நகைகளுக்கு மீண்டும் நகை கடைகளில் கொடுத்து 6 இலக்க எண்களுடன் கூடிய ஹால்மார்க் எவ்வாறு பொருத்துவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பு புதிய நகைகளை வாங்குபவர்களுக்கும், பழைய நகைகளை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கும் குழப்பமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழப்பத்தை தீர்க்க அரசு முழுமையான தகவலை தெரிவிக்க வேண்டும்.
பாதிப்பை ஏற்படுத்தி விடும்
வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி கல்பனா:-
பெண்கள் பலர் தங்க நகைகள் வாங்கும்போது அது ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதை கவனிக்க மாட்டார்கள். ஆனால் படித்தவர்கள், மேல்மட்டத்தினர் தான் தரத்தை பற்றி அறிவார்கள். ஆனால் அனைத்து தரப்பினரும் தங்கநகைகள் பற்றி அறிய வேண்டும் என்பதற்காக நகைக்கடைகளில் 6 இலக்க ஹால் மார்க் முத்திரையுடன் தான் நகைகள் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து அமலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தை வரவேற்கிறோம்.
இந்த திட்டத்தால் பழைய நகைகளுக்கு மதிப்பை குறைத்து விடக்கூடாது. ஏனென்றால் பெரும்பாலான பெண்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்கு வருங்காலத்தில் திருமணம் செய்து கொடுக்க இப்போதே இருந்தே நகைகளை சேமித்து வைத்து உள்ளனர். இந்த புதிய திட்டத்தால் பழைய தங்கத்தின் மதிப்பு குறைந்து விட்டால் பெண்கள் மத்தியில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதனால் பழைய நகைகளின் மதிப்பு குறையாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.