< Back
மாநில செய்திகள்
நாய் சண்டையால் மோதல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நாய் சண்டையால் மோதல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தினத்தந்தி
|
2 Sept 2023 3:20 AM IST

நாய் சண்டையால் ஏற்பட்ட மோதலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நெல்லை அருகே கங்கைகொண்டானை அடுத்த கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் முருகன் (வயது 26). இவர் அங்குள்ள தனியார் டயர் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கணபதி மகன் மணிகண்டன் (30), கூலி தொழிலாளி. இவர்கள் 2 பேரும் தங்களது வீடுகளில் நாய் வளர்த்து வந்தனர். நாய்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டபோது, அவற்றின் மீது உரிமையாளர்கள் கல்லை தூக்கி வீசினர். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

கடந்த 8-4-2015 அன்று முருகன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன், வேப்பங்குளத்தைச் சேர்ந்த பேச்சி மகன் சண்முகம் (28), கரிசல்குளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (56) மற்றும் முருகன், மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து முருகனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன், சண்முகம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் சண்முகம், பாலகிருஷ்ணனுக்கு தலா ரூ.1,500 அபராதமும், மணிகண்டனுக்கு ரூ.1,000 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இ்ந்த வழக்கில் தொடர்புடைய முருகனுக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்தார். மாரிமுத்து விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானார்.

மேலும் செய்திகள்