அரியலூர்
இரு தரப்பினர் இடையே மோதல்; 6 பேர் மீது வழக்கு
|இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி(வயது 60). விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் தங்கராசு மகன் பொன்னுசாமிக்கும் இடையே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பெரியசாமி மகன்கள் கலைமணி, சின்னத்துரை(45), நாகரத்தினம்(40) ஆகியோரும், தங்கராசு மகன் பொன்னுசாமி, நடராஜன் மகன் நீலமேகம்(45), காசிநாதன் மகன் கண்ணையன்(60) ஆகியோரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் கலைமணி, சின்னத்துரை, நாகரத்தினம், கண்ணையன், நீலமேகம், பொன்னுசாமி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.