< Back
மாநில செய்திகள்
இரு தரப்பினரிடையே மோதல்; வீடுபுகுந்து 5 பேர் மீது தாக்குதல்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்; வீடுபுகுந்து 5 பேர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
1 Sept 2023 12:15 AM IST

இரு தரப்பினரிடையே மோதல்; வீடுபுகுந்து 5 பேர் மீது தாக்குதல்

நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுபுகுந்து 5 பேர் மீது உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்ைக எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாகத்தினர் கூட்டம்

நாகையை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கிராம குத்தகை கணக்கு தொடர்பாக கடந்த 6 மாதமாக இருபிரிவினருக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது.

நேற்று தி.மு.க. பிரமுகர் ஒருவர் தலைமையில் கிராம நிர்வாகத்தினர் கூட்டம் நடந்தது. அப்போது குத்தகை கணக்கு சம்பந்தமாக இருதரப்பினருக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வீடு புகுந்து தாக்குதல்

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்டோர் அதே கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன்(வயது 54) என்பவரின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். ஜெகநாதன், அவரது மனைவி கலைவாணி, மகன் ராம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சவுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேரை உருட்டுகட்டை, கல்லால் சரமாரியாக தாக்கினர்.

இதனையடுத்து காயம் அடைந்த ஜெகநாதன் தரப்பினர் திருப்பி நடத்திய தாக்குதலில் கவுசன், சத்தியமூர்த்தி, சேகர் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சாலை மறியல்

உருட்டுகட்டையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த 5 பேரும் அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து நாகூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை வெட்டாற்று பாலத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மீனவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை குண்டு, கட்டாக தூக்கி கைது செய்ய முயன்றனர்.

தள்ளு முள்ளு

ஆனால் மீனவர்கள் வாகனத்தில் ஏற மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு உருட்டு கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்த 5 பேரையும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் குவிப்பு

இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு மேலும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்