< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்; பட்டாசு வெடித்த மாணவர் கைது18 பேர் அதிரடி நீக்கம்
சென்னை
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்; பட்டாசு வெடித்த மாணவர் கைது18 பேர் அதிரடி நீக்கம்

தினத்தந்தி
|
22 Aug 2023 1:03 PM IST

வேளச்சேரியில் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், பட்டாசு வெடித்த மாணவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 18 பேர் கல்லூரியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

கிண்டி,

சென்னை கிண்டி வேளச்சேரி சாலையில் குருநானக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மயிலாப்பூரைச் சேர்ந்த தனுஷ் என்பவர் 3-ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை தாவரவியல் படிக்கும் மாணவர்கள் கானா பாட்டு பாடியதாகவும், அதனை தனுஷ் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தாவரவியல் பிரிவு மாணவர்கள், தனுசை அடித்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரிக்கு வந்த தனுஷ், தன்னை தாக்கிய தாவரவியல் பிரிவு மாணவர்களை நோக்கி 2 பட்டாசுகளை வீசியதாக தெரிகிறது. இதில் ஒரு பட்டாசு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மற்றொரு பட்டாசு வெடிக்காமல் இருந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து வெடிக்காத பட்டாசை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், மாணவர்களை மிரட்ட வீசியது நாட்டு பட்டாசு என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நேற்று இரவு தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, நிருபர்களிடம் கூறியதாவது:-

குருநானக் கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதலில் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசை பயன்படுத்தி உள்ளனர். நாட்டு பட்டாசை பயன்படுத்திய ஒரு மாணவரை கல்லூரி காவலாளி பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டார். அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இன்னொரு மாணவரை தேடி வருகிறோம். அங்கு கத்தி எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுபோல் மாணவர்கள் இடையே மோதல் சம்பவம் நிகழும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரி நர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. குற்றச்செயலில் ஈடுபட்ட மாணவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இதனால் கடந்த காலங்களைவிட தற்போது மாணவர்களிடையே மோதல் சம்பவம் குறைந்து உள்ளது. இதுபோன்ற மோதல் சம்பவம் ஏற்படாமல் தடுக்க கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதன்படி கைதான மாணவர் உள்பட மோதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 18 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டது. இதில் 3-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர், 2-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர் அடங்குவார்கள். கல்லூரி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை சக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்