< Back
மாநில செய்திகள்
சகோதரர்களுக்குள் மோதல்;வாலிபர் பரிதாப சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

சகோதரர்களுக்குள் மோதல்;வாலிபர் பரிதாப சாவு

தினத்தந்தி
|
20 Jun 2023 6:45 PM GMT

சகோதரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவருடைய தம்பிகள் விக்னேஸ்வரன் (33), வேல்முருகன் (28). இவர்கள் கூலி வேலை பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன், விக்னேஸ்வரன் ஆகியோரின் மனைவிகள் அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. வேல்முருகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர்கள் 3 பேரும் தங்களது தாய் சுந்தரேஸ்வரி உடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை அவர்கள் 3 பேரும் குடித்து விட்டு சுந்தரேஸ்வரியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுந்தரேஸ்வரி வெளியே சென்று விட்டார். ஆனால் அண்ணன், தம்பிகள் 3 பேரும் தொடர்ந்து சண்டை போட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மணிகண்டன் தாக்கியதில் வேல்முருகன் காயமடைந்தார்.

உடனே அவரை வ.புதுப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக விக்னேஸ்வரன் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் படி கூறியதாக தெரிகிறது. ஆனால் வேல்முருகனும்,விக்னேஸ்வரனும் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மணிகண்டன் மீண்டும் தாக்கியதில் காயம் அடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேல்முருகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாய் சுந்தரேஸ்வரி வத்திராயிருப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வத்திராயிருப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மணிகண்டனை கைது செய்த வத்திராயிருப்பு போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்