< Back
மாநில செய்திகள்
1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
20 Jan 2023 12:15 AM IST

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஜமீன்முத்தூர்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாகன சோதனை

பொள்ளாச்சி நகர பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ஒரு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் குறிப்பிட்ட அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை பார்த்ததும் டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றார்.

இதுகுறித்து ஜமீன் முத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பதிவு எண்ணை வைத்து அந்த வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த வாகனத்தின் டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

டிரைவர் கைது

விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோபாலபுரத்தை சேர்ந்த பிரசாந்த் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் பொள்ளாச்சி நந்தனார் காலனி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 25 சாக்கு பைகளில் தலா 50 கிலோ வீதம் 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்