< Back
மாநில செய்திகள்
விபத்து இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விருதுநகர்
மாநில செய்திகள்

விபத்து இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தினத்தந்தி
|
12 April 2023 6:45 PM GMT

விபத்து இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விருதுநகர் அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் சித்ரா(வயது 30). சமையல் எண்ணெய் வியாபாரம் செய்து வந்த இவர் கடந்த 16.2.2016 அன்று தனது வியாபாரம் தொடர்பாக காரியாபட்டி நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனத்துடன் நின்றபோது அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ் மோதியதில் சித்ரா பலியானார். இது தொடர்பாக சித்ராவின் கணவர் சசிகுமார், மகன் அஜித்குமார், மகள் ஆர்த்தி மற்றும் பெற்றோர் ரவீந்திரன், மருதாயி ஆகியோர் நஷ்ட ஈடு கோரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாவட்ட கூடுதல் கூடுதல் நீதிமன்றம் பலியான சித்ராவின் பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்க முடியாது, சித்ராவின் கணவர் சசிகுமார் மற்றும் குழந்தைகள் அஜித்குமார், ஆர்த்தி ஆகியோருக்கு ரூ.13 லட்சத்து 73 ஆயிரத்து 760 நஷ்டஈடாக வழங்கவும் இழப்பீட்டு தொகை வழங்கும் நாள் வரை 7.5 சதவீத வட்டியுடன் வழங்குமாறும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. இதனை ஆட்சேபித்து போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு இந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீட்டுதொகை வழங்காததால் சித்ராவின் குடும்பத்தினர் மீண்டும் மாவட்ட கூடுதல் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்தகுமார் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.21 லட்சத்து 17 ஆயிரத்து 92-ஐ போக்குவரத்து கழக நிர்வாகம் சசிகுமார் மற்றும் அவரது குழந்தைகளுக்கு வழங்க உத்தரவிட்டார். பின்னரும் இழப்பீட்டு தொகை வழங்காததால் போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் சென்ற பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்