< Back
மாநில செய்திகள்
ஈரோடு வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 3½ கிலோ கஞ்சா பறிமுதல்

தினத்தந்தி
|
26 Dec 2022 2:52 AM IST

ஈரோடு வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 3½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


ஈரோடு வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 3½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிர கண்காணிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பொருட்கள், கஞ்சா கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏறி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாட்னாவில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சேலம் மாவட்டத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரகுவரன், ரெயில்வே போலீசார் கண்ணன், சுஜித்கான் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பிரிவு பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே வெள்ளை நிற பை கேட்பாரற்று கிடந்தது.

3½ கிலோ கஞ்சா

இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அதனை பிரிந்து பார்த்தபோது அதில் 3½ கிலோ கஞ்சா இருந்தது. இதுகுறித்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கேட்டபோது இது தங்களுடையது இல்லை என தெரிவித்தனர். போலீசார் வருவதை தெரிந்து கொண்ட கடத்தல் கும்பல் கஞ்சாவை அங்கேயே விட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதற்கிடையில் அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்தது. பின்னர் போலீசார் கஞ்சாவை கைப்பற்றி ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 4 தினங்களுக்கு முன்பு கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 20 கிலோ போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்