< Back
மாநில செய்திகள்
லாரியில் கடத்த முயன்ற குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

லாரியில் கடத்த முயன்ற குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
13 Aug 2022 11:12 PM IST

பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு சூளகிரி வழியாக லாரியில் கடத்த முயன்ற ரூ.11 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூளகிரி

வாகன சோதனை

சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி அருகே பாத்தகோட்டா ஜங்ஷனில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அந்த லாரியில் ஹான்ஸ் 1,500 கிலோ, பான்மசாலா 181 கிலோ மற்றும் புகையிலை பொருட்கள் என மொத்தம் ரூ.11 லட்சத்து 19 ஆயிரத்து 360 மதிப்பிலான 1,849 கிலோ குட்கா இருந்தது தெரிந்தது. மேலும் லாரியில் ரூ.9,600 மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்தன. இதுதொடர்பாக போலீசார், டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது டிரைவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிவன்னசெட்டி (வயது 38) என்பதும், உடன் வந்தவர் அதேபகுதியை சேர்ந்த பிரதீபா (26) என்பதும், தெரிந்தது. இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு குட்கா, மதுபாட்டில்களை கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து டிரைவர் உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குட்கா, மதுபாட்டில்கள், லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் தொடர்புடைய ஓசூரை சேர்ந்த கணேஷ் (50), புருஷேத்தமன், மற்றொரு பிரதீபா ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்