நாமக்கல்
2 மூதாட்டிகளை கொன்றது ஏன்?கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
|மூதாட்டிகள் கொலை
பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 78 வயதுடைய மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி காடச்சநல்லூர் அருகே பில்லுமடை காடு பகுதியில் 64 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த 2 கொலைகள் தொடர்பாக திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி தலைமையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார் தாஜ்நகர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் செல்வம் (32) என்பதும் மூதாட்டிகளை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
பரபரப்பு வாக்குமூலம்
ஜலகண்டாபுரத்தை சேர்ந்த நான் கூலி வேலை செய்து வந்தேன். எனது உறவினர் ஓடப்பள்ளி அருகே இருப்பதால் அங்கு அடிக்கடி சென்று வருவேன். அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை கிடைத்தால் செய்துவிட்டு அங்கேயே தங்கிக் கொள்வேன்.
இந்தநிலையில் உறவினர் வீட்டு அருகே ஒரு கோழியை திருடியதால் அவர்கள் என்னை துரத்தி விட்டனர். கடந்த மார்ச் மாதம் ஓடப்பள்ளி அருகே சென்று கொண்டிருக்கும் போது விவசாயக் காட்டில் 78 வயது மூதாட்டி ஒருவர் தனியாக இருப்பதை பார்த்தேன். போதையில் இருந்ததால் அவரை கற்பழிக்க முயற்சி செய்தேன். பின்னர் அவர் சத்தம் போடவே அங்கிருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்தேன். பின்னர் அவரது கழுத்தில் இருந்த நகையை அறுத்துக்கொண்டு காவிரி ஆற்றில் குளித்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் ஜலகண்டாபுரத்துக்கு வந்து விட்டேன்.
இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காடச்ச நல்லூர் அருகே பில்லுமடை காடு பகுதியில் வேலைக்கு சென்று வந்துள்ளேன். இந்த நிலையில் கடந்த மாதம் அந்த பகுதிக்கு நான் மீண்டும் வேலைக்கு சென்ற போது அங்கு தனியாக வசித்து வந்த 64 வயது மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தேன். அப்போது அவரிடம் நைசாக பேசி கற்பழித்து விட்டு அங்கிருந்த கல்லால் தலை மற்றும் முகத்தில் தாக்கி அடித்துக்கொன்றேன். பின்னர் அவரது காதில் இருந்த தோடுகளை பறித்துக்கொண்டு ஜலகண்டாபுரத்துக்கு சென்று விட்டேன். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த என்னை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு அவர் போலீசில் கூறினார்.