நாமக்கல்
2½ வயது குழந்தையை அடித்துக்கொன்றது ஏன்?கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
|ராசிபுரம் அருகே 2½ வயது ஆண் குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராசிபுரம்
2½ வயது குழந்தை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில்வாசன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும், தருண் (2½) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இவர்கள் தியாகராஜன் என்பவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கபில்வாசன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி ராஜாமணி இரவில் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்காக தோசை சுட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 7 மணி அளவில் ராஜாமணியின் வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் பாலமுருகனின் மகன் ராகுல் (23) சென்று உள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை தருணின் கழுத்தில் ராகுல் காலால் மிதித்தும், கையால் அடித்தும் உள்ளார்.
அடித்துக்கொலை
இதைப்பாா்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாமணி ஓடிவந்து குழந்தை தாக்கப்படுவதை தடுத்துள்ளார். அப்போது ராகுல், ராஜாமணியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜாமணி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர்.
பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் காண்பித்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
இந்த சம்பவம் பற்றி ராஜாமணி நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட குழந்தை தருணின் உடல் பிரேத பரிசோதனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது.
பரபரப்பு வாக்குமூலம்
இந்தநிலையில் ராகுலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. போலீசாரிடம் ராகுல் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வருவேன். இதனால் பலரும் என்னை பார்த்து ஏளனமாக பேசுவார்கள். அப்படி பேசியவர்களில் ராஜாமணியும் ஒருவர். என்னிடம் யாரும் பேசுவதில்லை. எனது உறவினர் என்பதால் ராஜாமணி மீது எனக்கு கோபம் இருந்து வந்தது. அவர் மீது இருந்த கோபத்தின் காரணமாகவே குழந்தை தருணை அடித்துக்கொன்றேன்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட ராகுலை போலீசார் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
2½ வயது ஆண் குழந்தையை உறவினரே அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.