< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு; திருச்சியில் 24-ந்தேதி நடக்கிறது
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு; திருச்சியில் 24-ந்தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
8 April 2023 4:49 AM IST

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் திருச்சியில் வருகிற 24-ந்தேதி மாநாடு நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-

1987-ல் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுப்பட்டது. ஜானகி அணியில்தான் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்தார்கள். ஜெயலலிதா அணியில் வெறும் 33 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தார்கள். நாங்கள் தான் உண்மையான வாரிசு என்றார், ஜெயலலிதா.

1987-ல் ஏற்பட்ட பிளவுக்கு 1989-ல் நாட்டு மக்கள் ஜெயலலிதாதான் என்று சரியான தீர்ப்பு அளித்தார்கள். இந்த இயக்கத்தில் பிளவுகள் ஏற்பட்ட போதெல்லாம், மக்கள் தான் சரியான தீர்ப்பை வழங்குகிறார்கள். ஆகவே மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

24-ந்தேதி மாநாடு

எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வதற்கு வருகிற 24-ந்தேதி திருச்சியில் மக்கள் மாநாடு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் விழா, அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடக்க உள்ளது. அதற்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வமும், நிர்வாகிகளும் மாவட்டந்தோறும் மக்களை சந்திக்க இருக்கிறார்கள். நாங்கள் இனி எடப்பாடி பழனிசாமி தரப்பினரை பற்றி கவலைப்பட போவதில்லை. விமர்ச்சிக்கப்போவது இல்லை. பேசப்போவதும் இல்லை.

சூப்பர் எம்.ஜி.ஆர். (எடப்பாடி பழனிசாமி) தன்னை முன்னிலைப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தோல்வியைதான் சந்திக்கிறார். வெற்றி என்பதே கிடையாது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு?

ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நடத்தும் எந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டமாக இருந்தாலும் அது சட்டவிரோதமானது. தேர்தல் ஆணையத்தில் இன்று வரை 2021-ல் கட்சி விதிகளின்படி, சட்ட விதிகளின்படி நடைபெற்ற கட்சியின் தேர்தல் மூலம் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருக்கும் தாக்கீதுதான் செல்லும்.

நான் கோர்ட்டில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்று சொல்லவில்லை. உச்சபட்ச பதவிக்கு அதாவது தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் வைத்தால் போட்டியிட தயார் என்றுதான் சொல்லி இருந்தோம். அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்.

பிரதமர் மோடியை வாய்ப்பு இருந்தால், சந்திப்பேன். ஆனால் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.

கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். பா.ஜ.க.வோடு பேச்சுவார்த்தை நடக்கிறது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் தொகுதிகளில் போட்டியிடுவோம்.

ஜெயலலிதாவுக்கு உருவச்சிலை

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் நடத்தும் மக்கள் மாநாட்டில் நிச்சயமாக உறுதி செய்வோம். திருச்சி மாநாடு மிகப்பெரிய மக்கள் சக்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எந்த நோக்கத்துக்காக அ.தி.மு.க.வை உருவாக்கினார்கள் என்பது அங்கு நிரூபணம் ஆகும்.

முப்பெரும் விழாவில் தீர்மானமாக இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக உயர்த்தி காட்டிய நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை அனைத்து மாவட்டங்களில் வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்