< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போதையில் தள்ளாடிய பயணியை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துனர் பணியிடை நீக்கம்
|20 Nov 2022 4:17 PM IST
மதுபோதையில் இருந்த பயணியை பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்ட நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப் பேருந்தில் மது போதையில் இருந்த பயணி ஒருவர், பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு கீழே இறங்க முடியாமல் தள்ளாடினார். அப்போது பேருந்தில் நடத்துனராக இருந்த பிரகாஷ், அந்த பயணியை இறங்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் போதையில் இருந்த அந்த நபரால் கீழே இறங்க முடியவில்லை. இதையடுத்து படிக்கட்டிலேயே தள்ளாடியவாறு நின்று கொண்டிருந்த அந்த போதை ஆசாமியை, பிரகாஷ் கீழே தள்ளினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் மதுபோதையில் இருந்த பயணியை பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்ட நடத்துனர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.