கன்னியாகுமரி
பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட 1¼ பவுன் நகையை மீட்டு ஒப்படைத்த கண்டக்டர்
|திருவனந்தபுரம் சென்ற பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட 1¼ பவுன் நகையை மீட்டு ஒப்படைத்த கண்டக்டரை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.
நாகர்கோவில்,
திருவனந்தபுரம் சென்ற பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட 1¼ பவுன் நகையை மீட்டு ஒப்படைத்த கண்டக்டரை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.
தாயாரை பார்க்க வந்தவர்
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 35). இவருடைய தாயார் குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார். அவரைப் பார்ப்பதற்காக பூர்ணிமா நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் வந்தார். பின்னர் நேற்று அதிகாலை வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ்சில் குழித்துறைக்கு புறப்பட்டார். பஸ்சை விட்டு இறங்கிய பூர்ணிமா தனது கையைப் பார்த்தபோது அவர் அணிந்திருந்த 1¼ பவுன் கைச்சங்கிலி காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவர்கள் உடனே பூர்ணிமா வைத்திருந்த பஸ் பயணச்சீட்டை பார்த்து சம்பந்தப்பட்ட பஸ்சின் கண்டக்டர் முத்துராஜனுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது கண்டக்டர் நகை எடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ் வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.
நகை ஒப்படைப்பு
பஸ் நிலையம் வந்ததும் டிரைவர் சிம்சன், கண்டக்டர் முத்துராஜன் ஆகியோர் அந்த நகையை பஸ் நிலைய போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பஸ் நிலைய மேலாளர் சிவராம், செக்கிங் இன்ஸ்பெக்டர் தங்கப்பன் ஆகியோர் பூர்ணிமாவிடம் அந்த நகைைய ஒப்படைத்தனர். அவர் அதிகாரிகளுக்கும், பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கும் நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றார். பயணி தவறவிட்ட நகையை நேர்மையுடன் எடுத்து ஒப்படைத்த கண்டக்டர், டிரைவரை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.