அரியலூர்
இலவச பஸ் பாஸ் இருந்தும் மாணவிகள் பயணம் செய்ய நடத்துனர் அனுமதி மறுப்பு-வைரலாகும் வீடியோ
|அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் அரசு பஸ்சில் இலவச பஸ் பாஸ் இருந்தும் மாணவிகள் பயணம் செய்ய நடத்துனர் அனுமதி மறுப்பது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இலவச பஸ் பாஸ்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழுவூர், சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளூர், முடிகொண்டான் திருமானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் தஞ்சையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் மூலம் சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் அரசு பஸ் நடத்துனர்கள் மாணவிகளை இலவச பஸ் பாஸ் இருந்தும் அவர்களை ஏற்ற மறுத்து வருகின்றனர். மேலும் அவர்களை பஸ் புறப்படும் போது மட்டும் ஏறுங்கள். முன்னதாகவே ஏறி அமர்ந்து கொள்ளாதீர்கள். அடுத்த பஸ்சில் வாருங்கள், ஓசி பயணம் செய்யக் கூடாது என்று கூறி வருகின்றனர். இதனால் நடத்துனருக்கும் மாணவிகளுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
வீடியோ வைரல்
இதற்கிடையே அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் அரசு பஸ்சில் இலவச பஸ் பாஸ் இருந்தும் மாணவிகள் பயணம் செய்ய நடத்துனர் அனுமதி மறுத்துள்ளார். இதற்கு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் மாணவிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் கல்லூரி மாணவிகள் இலவச பஸ் பாஸ் இருந்தும் பயணம் செய்ய முடியவில்லை. அரியலூர்- தஞ்சை வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றனர்.