பொதுக்குழு நடத்துவது வெறும் கனவாகத்தான் இருக்கும் : கோவை செல்வராஜ் அதிரடி கருத்து
|ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு நடத்துவது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும் என கோவை செல்வராஜ் கூறினார்.
சென்னை,
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்குழு கூடியது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது ;
ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும். அதிமுகவை பலப்படுத்த தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்கிறார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள்.ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு நடத்துவது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்.ஓபிஎஸ் இனிமேல் துணிந்து செயல்பட உள்ளதாக கூறினார் .