< Back
மாநில செய்திகள்
மாநகராட்சி பகுதிகளில் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

மாநகராட்சி பகுதிகளில் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
29 Aug 2023 11:11 PM IST

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும் என தமிழக அரசை, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

பழைய கட்டிடங்களை இடிக்க...

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் மாநகரில் பொதுவாக குறுகிய சாலைகளும், 3 அடிக்கும் குறைவான தெருக்களும் அதிகம் உள்ளன. அத்தகைய இடங்களில் உள்ள பழைய கடைகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இயற்கை சீற்றங்களால் இடிந்து விழும் சூழ்நிலையில் அவற்றை இடித்துவிட்டு புதிய கடைகள், வீடுகள் கட்ட மாநகராட்சி அனுமதி தருவதில்லை. மின் இணைப்பும் தருவதில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் இவ்வாறு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பழைய கட்டுமானங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள், கடைகள் ஆகியவற்றை கட்டுவதற்கு அனுமதியும், மின் இணைப்பும் வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பலமுறை வலியுறுத்தினார்கள்.

இடிந்து விழும் நிலையில் வீடுகள்

அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 18-ந்தேதி, நகர்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குனர், நாகர்கோவிலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும், பின்னர், இது மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அவ்வாறு உறுதி அளிக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்னரும், மேல் நடவடிக்கை ஏதும் இல்லாததால், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாகர்கோவிலில் கட்டிட அனுமதி இல்லாமல் இடிந்துவிழும் நிலையில் உள்ள வீடுகளில், மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டும், உடனடியாக புதிய கட்டிடங்கள் மற்றும் மின் இணைப்புக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, சட்டமன்றத்தில் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் கேள்வி எழுப்பினார்.

4 மாதங்கள் ஆகியும்...

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அப்போது பதில் அளித்துப் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 'தொடர் கட்டிடம் பற்றி ஒரு பிரச்சினை இருக்கிறது. அதற்கு வழிவகை செய்வதற்காக ஏற்கனவே துறையின் மூலமாக ஆலோசித்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என்றார். அதேபோல், திட்ட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய பிரச்சினையும் இருக்கிறது. எனவே, இதையெல்லாம் ஒருங்கிணைத்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை. எனவே, நாகர்கோவில் மாநகராட்சி மக்களை பாதிக்கின்ற வகையில் உள்ள தொடர் கட்டிடம் மற்றும் திட்ட அனுமதி ஆகிய பிரச்சினைகளை சரிசெய்து, உடனடியாக கட்டிட அனுமதி மற்றும் மின் இணைப்பு வழங்க விரிவான அரசாணையை வெளியிட வேண்டும்.

இந்த அரசாணை தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கும் பொருந்தும்படியான உத்தரவாக வெளியிட்டு, அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கும் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்