கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய கொடூர தாய்
|கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தைகளை அடித்து துன்புறுத்திய தாயை போலீசார் கைது செய்தனர்.
குமரி,
குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பிரியா (வயது 39). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு குமார் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து பிரியாவுக்கு மங்கலக்குன்று பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் உருவானது. இந்த மோகத்தால் அவர் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். நித்திரவிளை அருகே உள்ள சோமாசிமங்கலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ளக்காதலன் ஜெகனுடன் குடும்பம் நடத்தினார்.
கள்ளக்காதலில் மயங்கிய பிரியா குழந்தைகளை சரிவர கவனிக்கவில்லையாம். மேலும் அவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதம் 24-ந் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 14, 13, 10 வயது மதிக்கத்தக்க 3 மகன்களையும் காணவில்லை என அவருடைய தாயார் பிரியா நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் தேடிவந்தனர். மாயமான 3 பேரும் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்ததை போலீசார் அறிந்தனர். உடனே அங்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது தாயும், அவருடன் வசித்து வரும் ஜெகனும் தங்களை துன்புறுத்தியதாகவும், இதனால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அந்த குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிரியா, ஜெகன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். நேற்றுமுன்தினம் இரவு தனது பெண் குழந்தையுடன் நெய்யூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு பிரியா சென்றுள்ளார்.
இதனை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் குழந்தையை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். அதே சமயத்தில் கள்ளக்காதலன் ஜெகனை போலீசார் தேடிவருகின்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தைகளை துன்புறுத்தியதாக தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.