சென்னை
ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
|ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணிபுரியும் என்ஜினீயர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, ஆவடி துணை கமிஷனர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வேளச்சேரியை சேர்ந்த அருண்குமார் (வயது29), என்பவர் போரூர் பகுதியில் போதை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்தபோது மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரித்த போது, ராமாபுரத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து கொண்டே அவர், ஆன்லைனில் போதைப்பொருட்களை வாங்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவருக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர், கடந்த 2020-ம் ஆண்டு பெங்களூருவில் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.