சென்னை
வேளச்சேரியில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது - உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்
|வேளச்சேரியில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். இதில் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்.
சென்னை வேளச்சேரி தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்த வீட்டின் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 2 வாலிபர்கள் கையில் செல்போனுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வீட்டின் வெளியில் உள்ள குளியளறையில் குளிப்பதை யாரோ படம் எடுப்பதை கண்டதும் பெண்கள் கூச்சல் போட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து வேளச்சேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் கம்ப்யூட்டர் என்ஜீனியரான ஸ்ரீராம்(வயது 29) மற்றும் அவரது நண்பரான வெங்கடேசன் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது செல்போனை ஆய்வு செய்ததில் பெண்களின் குளியல் காட்சிகள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரும் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து ரசித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் வேளச்சேரி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.