சேலம்
3,698 வழக்குகளுக்கு சமரச தீர்வு
|சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 698 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 698 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
சேலம் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் மோட்டார் வாகன விபத்தில் படுகாயம் அடைந்து சமரசம் செய்து கொண்டவருக்கு ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்திற்கான இழப்பீடு தொகைக்கான காசோலையை வழங்கினார். முன்னதாக சார்பு நீதிபதி தங்கராஜ் வரவேற்று பேசினார். தொடர்ந்து நீதிபதிகள் முன்னிலையில் மூத்த வக்கீல்கள், வழக்கு சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் இடையே சமரசம் செய்யப்பட்டது. முடிவில் நீதிபதி கிறிஸ்டல் பபிதா நன்றி கூறினார்.
3,698 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சேலத்தை தொடர்ந்து சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் ஆகிய கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
இதில், குற்றவியல் வழக்கு, காசோலை, வங்கி கடன்கள், மோட்டார் வாகன விபத்து வழக்கு, தொழிலாளர் நலம், உரிமையியல் வழக்கு உள்பட 5 ஆயிரத்து 384 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் 3 ஆயிரத்து 698 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ.27 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 602 தீர்வு தொகை வழங்கப்பட்டது.