செங்கல்பட்டு
மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொழிற்சாலைகளில் உருவாகும் மக்கும் குப்பையில் தாங்களே உரம் தயாரிக்க வேண்டும் - நகராட்சி ஆணையாளர்
|மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொழிற்சாலைகளில் உருவாகும் மக்கும் குப்பையில் தாங்களே உரம் தயாரிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள். கல்லூரிகள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இவைகள் அனைத்தும் 5 ஆயிரம் ச.மீட்டர் பரப்பளவுக்கு அதிகமான வளாகங்கள் அல்லது தினசரி சுமார் 100 கிலோ அளவுக்கு அதிகமான கழிவுகளை உற்பத்தி செய்பவர்கள் கூடுதல் திடக்கழிவு உற்பத்தியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தினந்தோறும் தங்களிடம் உருவாகும் கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகளாக தரம் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்கப்படும் மக்கும் கழிவுகளை தங்களது வளாகத்திற்கு உள்ளேயே ஏதேனும் ஒரு செயல் திட்டத்தின்படி உரமாக்கும் பணியில் ஈடுபட வேண்டும். மீதமுள்ள உலர் கழிவுகளை அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சியாளர் வசமோ அல்லது நகராட்சி பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். மேற்படி பணியை மேற்கொள்ள இட வசதி இல்லாத கூடுதல் கழிவு உற்பத்தியாளர்கள் கூட்டாக இணைந்து கழிவுகளை உரமாக்கும் பணியில் ஈடுபட முயற்சிகள் மேற்கொள்ளலாம். தவறும் பட்சத்தில் தங்களது கழிவுகளை நகராட்சியிலோ அல்லது நகராட்சியின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட முகவரிடம் தான் கழிவுகளை மக்கும், மக்காத கழிவுளாக பிரித்து ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.