< Back
மாநில செய்திகள்
புதிய தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி நிறைவு
கரூர்
மாநில செய்திகள்

புதிய தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி நிறைவு

தினத்தந்தி
|
7 Sep 2022 6:19 PM GMT

வேட்டமங்கலத்தில் 90 நாட்கள் நடந்த புதிய தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி நிறைவு பெற்றது. இதையடுத்து அவர்கள் சாகச நிகழ்ச்சி நடத்தி அசத்தினர்.

புதிய தீயணைப்பு வீரர்கள்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1,204 புதிய தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தாம்பரம் மாநில பயிற்சி மையம் மற்றும் 8 தற்காலிக பயிற்சி மையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த 8 பயிற்சி மையங்களில் ஒன்றான நொய்யல் வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பல்வேறு பயிற்சிகள்

இந்த பயிற்சி மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 139 தீயணைப்பு வீரர்களுக்கு 90 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்கள் சந்திரகுமார் (கரூர்), துரை (நாகப்பட்டினம்), வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 5 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 10 முன்னணி தீயணைப்பு வீரர்கள், 10 தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைத்தல், மீட்புப்பணிகள், விபத்துக்களில் இருந்து மீட்டல், நீச்சல் பயிற்சி, மலையேற்றம் பயிற்சி, யோகா, தீயணைப்பு கருவிகளை இயக்குதல் நீர் விடு குழாய் பயிற்சி, உடற்பயிற்சி, தடை தாண்டும் பயிற்சி, ஏணி ஏறுதல், கயிறு ஏறுதல் உள்பட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

சாகச நிகழ்ச்சி

பயிற்சி வகுப்பு மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி நிகழ்ச்சி அணிவகுப்பு ஒத்திகை, சாகச நிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் கேடயமும் வழங்கினர். நேற்று நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவுக்கு திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேயபூபதி தலைமை தாங்கி பயிற்சி முடிவுற்ற தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் பயிற்சி நிறைவு பெற்ற 139 தீயணைப்பு வீரர்கள் தங்களது பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன், பயிற்சியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்