திண்டுக்கல்
ரோப்கார் பராமரிப்பு பணி நிறைவு
|பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணி நிறைவு பெற்றது. இதையடுத்து நாளை சோதனை ஓட்டம் நடக்கிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார் சேவை உள்ளது. இயற்கை எழிலை ரசித்தப்படி, அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் 2 நிமிடத்தில் மலைக்கோவிலை சென்றடையலாம். பக்தர்கள் நலன் கருதி தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு 45 நாட்களும் ரோப்காரில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி, கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. அப்போது, ரோப்காரின் முக்கிய பாகங்கள் அகற்றப்பட்டு பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மெயின் 'சாப்ட்' புதிதாக வாங்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 'சாப்ட்' வரவழைக்கப்பட்டு ரோப்காரில் பொருத்தப்பட்டது. நேற்று ரோப்காரில் பெட்டிகள் பொருத்தும் பணி நடந்தது. நேற்றோடு அனைத்து பணிகளும் நிறைவு பெற்றது. நாளை (வெள்ளிக்கிழமை) ரோப்கார் பெட்டிகளில் கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. வல்லுனர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் சோதனை ஓட்டம் இருந்தால், ரோப்கார் சேவை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.