< Back
மாநில செய்திகள்
புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்...!
மாநில செய்திகள்

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்...!

தினத்தந்தி
|
16 Oct 2022 8:29 AM IST

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவடைந்து உள்ளதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.

சென்னை,

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும், கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். மேலும், பெருமாளை வணங்கினால் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

வழக்கமாக 5 சனிக்கிழமைகள் புரட்டாசி மாதத்தில் வரும் . ஆனால் இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமைகள் மட்டுமே வந்தது. அந்த வகையில் நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் அனைத்து பெருமாள் கோவில்களில் அதிகமான கூட்டம் காணப்பட்டது.

இந்த நிலையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நேற்றுடன் நிறைவடைந்ததால் பெருமாளுக்கு விரதமிருந்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து கொண்டனர்.

இதனால் சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. புரட்டாசி மாதம் காரணமாக கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன்சந்தையில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால், மீன்களின் விலையும் குறைந்திருந்தது. தற்போது நேற்றைய சனிக்கிழமையுடன் புரட்டாசி விரதம் முடிந்ததால் இன்று அதிகாலை முதலே காசிமேடு மீன்சந்தைக்கு ஏராளமானோர் மீன்களை வாங்க வந்தனர்.

விசைப் படகுகளில் கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள், வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, பால் சுறா, தோல்பாறை உள்ளிட்ட மீன்களை அதிக அளவு பிடித்து வந்தனர். இதனால், பெரிய மீன்கள் அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்