பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு நிறைவு: குவிந்த விண்ணப்பங்கள்
|சான்றிதழ் சரிபார்ப்பு, வருகிற 13-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ., பி.டெக். உள்பட தொழில்நுட்ப படிப்புகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவின் முதல் நாளில், 20 ஆயிரத்து 97 மாணவர்கள் விண்ணப்பித்தார்கள்.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. 2 லட்சத்து 48 ஆயிரத்து 848 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதில், 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள். அவர்களில், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 145 மாணவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு 2 லட்சத்து 29 ஆயிரத்து 175 விண்ணப்பங்கள் பொறியியல் படிப்புக்கு குவிந்தன. அதில், ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். கடந்த ஆண்டை காட்டிலும், 19 ஆயிரத்து 673 விண்ணப்பங்கள் அதிகம் பதிவாகி உள்ளது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 12-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்கள் வருகிற 12-ந்தேதி வெளியிடப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு, வருகிற 13-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தேதி ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.