நிறைவடைந்த பணிகள்: ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
|மலை ரெயில் மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக கடந்த மாதம் அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறாங்கற்கள், மண் சரிந்து தண்டவாளம் சேதமடைந்தது. சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும் கனமழை எச்சரிக்கையாலும் நேற்று (ஆக.31) வரை மலை ரெயில் சேவையை ரத்து செய்து தென்னக ரெயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதன் காரணமாக செப்.1 (இன்று) முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரெயில் சேவை தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மலை ரெயில் மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.