< Back
மாநில செய்திகள்
நிறைவேற்றப்பட்ட திட்டமோ 4 வழிச்சாலை அமைத்ததோ இருவழிச்சாலை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

நிறைவேற்றப்பட்ட திட்டமோ 4 வழிச்சாலை அமைத்ததோ இருவழிச்சாலை

தினத்தந்தி
|
6 Oct 2022 12:15 AM IST

உளுந்தூர்பேட்டை-சேலம் இடையே நிறைவேற்றப்பட்ட திட்டமோ 4 வழிச்சாலை அமைத்ததோ இருவழிச்சாலை அல்லல்படும் வாகன ஓட்டிகளுக்கு விடிவுகாலம் பிறப்பது எப்போது?

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாகத்தான் திருச்சி, கடலூர், விழுப்புரம் சென்னை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். எனவே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையில் இருந்து சேலம் வரை உள்ள 136 கிலோமீட்டர் தூரம் வரை ரூ.941 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நடைபெற்றது.

நான்கு வழிச்சாலை

இந்த சாலை கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் சாலைப்பணி முழுமையாக நிறைவடைய வில்லை. அதாவது மொத்தமுள்ள 136 கிலோ மீட்டர் தூரத்தில் 97.36 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும் 4 வழி சாலையாகவும், 38.99 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு வழி சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் 2.57 கிலோ மீட்டர், எலவனாசூர்கோட்டை புறவழி சாலை 4 கிலோ மீட்டர், தியாகதுருகம் புறவழிச் சாலை 3.90 கிலோமீட்டர், கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை 5.10 கிலோமீட்டர், சின்னசேலம் புறவழிச்சாலை 4.6 கிலோ மீட்டர், நரசிங்கபுரம் மற்றும் ஆத்தூர் 7.2 கிலோமீட்டர், வாழப்பாடி 4.62 கிலோமீட்டர், உடையபட்டி 6.4 கிலோமீட்டர் ஆகிய 8 புறவழிச்சாலைகளில் மொத்தம் 38.99 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர் விபத்துகள்

இந்த சாலையின் வழியாக பஸ், கார், லாரி என தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. உளுந்தூர்பேட்டை வழியாக சேலத்திருந்து சென்னை செல்லும் வாகனங்களும், சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்லும் வாகனங்கள் 4 வழி சாலையில் அதிக வேகத்தில் செல்கின்றன.

அவ்வாறு செல்லும் போது திடீரென குறுகிய இரு வழிசாலையில் செல்லும்போது வாகனங்கள் எதிரும், புதிருமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறு செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை பலகைகள், தடுப்பு சுவர்களில் பிரதிபலிப்பான்கள் போன்றவை அமைக்காததும் விபத்துக்கு காரணம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புறவழிச்சாலையில் உள்ள இரு வழிச்சாலையில் விபத்துகளை தடுக்க காவல்துறை மூலம் பிரதி பலிப்பான்கள் மற்றும் தடுப்பு கட்டைகள் ஆகியவற்றை தற்காலிமாக வைத்துள்ளனர். இது சற்று ஆறுதலாக இருந்தாலும் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சுங்க கட்டணம் வசூலிப்பு

இது ஒருபுறம் இருக்க சாலை அரைகுறையாக இருந்தாலும் உளுந்தூர்பேட்டை-சேலம் வரை 3 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சாலை முழுமையாக அமைக்கவில்லை. ஆனால் கட்டணத்தை மட்டும் முழுமையாக வசூல் செய்கிறார்களே என்ற ஆதங்கம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் உள்ளது.

எனவே மத்திய அரசு உடனடியாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை-சேலம் இடையே உள்ள 8 இடங்களில் புறவழிச்சாலையில் உள்ள 2 வழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உயிரிழப்புகள்

இது குறித்து கள்ளக்குறிச்சி நுகர்வோர் சங்க செயலாளரும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுப்பினருமான அருண்கென்னடி கூறும்போது, உளுந்தூர்பேட்டை- சேலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில இடத்தில் 2 வழிச்சாலையாக உள்ளது.

அதேபோல் மேம்பாலங்கள் உள்ள பகுதிகளிலும் 2 வழிச்சாலையாக உள்ளது. இதனால் வாகனங்கள் எதிரும், புதிருமாக செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கி நிற்பதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் 2 வழிச்சாலையில் உள்ள மேம்பாலங்களில் தெரு மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதுவும் விபத்துக்கு ஒரு காரணம். எனவே பொதுமக்கள் நலன் கருதி மத்திய அரசு 4 வழிச்சாலையில் இடையே உள்ள 2 வழிச்சாலைகளை உடனடியாக 4 வழிச்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது. அல்லது பகுதி கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்றார்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜானி என்பவர் கூறும்போது, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைத்து 12 வருடங்கள் ஆகியும் புறவழிச்சாலை பகுதிகளில் சில இடங்களில் இரு வழிச்சாலையாக உள்ளன. இரவு நேரங்களில் குறுகிய இரு வழிச்சாலைகளில் வாகனங்கள் எதிரும் புதிருமாக வேகமாக செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்து வருகின்றனர். புதிதாக வாகனங்களை வாங்கும்போது சாலை வரியையும் சேர்த்து வாங்கிக்கொள்கின்றனர். அதேபோல் சாலைகளில் செல்லும்போது சுங்க கட்டணமும் வசூல் செய்கின்றனர். ஆனால் உளுந்தூர்பேட்டை-சேலம் இடையே உள்ள 4 வழிச்சாலைகளில் சில இடங்களில் இரு வழிச்சாலையாக உள்ளது வேதனையாக உள்ளது. எனவே பயணம் செய்யும் பொது மக்களின் உயிரை காக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்