அரியலூர்
பெண் சாவில் மர்மம் உள்ளதாக புகார்
|பெண் சாவில் மர்மம் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி வைரம்(வயது 60). ரங்கசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வைரம் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே வைரம் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு வைரத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள சிலர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது அத்தையான வைரத்தின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.