சென்னை
விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் - மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
|விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சென்னை காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் உள்ள ஆதி திராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியில் சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், குடிநீர் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும், மேலும் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பலமுறை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இது பற்றி தகவலறிந்ததும் ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, சப்-கலெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் கோரிக்கைகளை ஓரிரு நாட்களில் நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.