திண்டுக்கல்
கொத்தடிமை தொழிலாளர்கள் பற்றி புகார் அளிக்கலாம்
|கொத்தடிமை தொழிலாளர்கள் பற்றி புகார் அளிக்கலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
வத்தலக்குண்டு தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்ட நிறுவனங்கள்) பா.ஆனந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1976-ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ந்தேதி (இன்று) கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொத்தடிமை தொழிலாளர் என்பவர் தான் அல்லது தனது முன்னோர்கள் வாங்கிய கடனுக்காகவோ அல்லது வேறு சமுதாய கடமைகளுக்காகவோ, விருப்பப்பட்ட இடத்துக்கு செல்லுதல், விருப்பப்பட்ட வேலையை செய்தல் மற்றும் சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெறும் உரிமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மறுக்கப்பட்டால் அவர்கள் கொத்தடிமை தொழிலாளர் ஆவர்.
அவ்வாறு கொத்தடிமையாக ஒருவரை பணிக்கு அமர்த்துவது சட்டப்படியான குற்றம் ஆகும். எனவே அனைத்து தோட்டங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் கொத்தடிமைகளாக எவரையும் பணி அமர்த்தக்கூடாது. மேலும் தமிழகத்தை கொத்தடிமை தொழில் முறை இல்லாத மாநிலமாக மாற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். கொத்தடிமை தொழிலாளர் பற்றிய புகார்களை 1800 4252 650 எனும் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.