சேலம்
வீடுகளை காணவில்லை கலெக்டரிடம் புகார்
|வீடுகளை காணவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் கூறினர்.
சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லமூப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து புகார் மனுவை அளித்தனர். அதில், மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் காந்திநகர் பகுதியில் அனைவரும் வாடகை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். பல ஆண்டுகளாக வீட்டுமனை கேட்டு போராடி வருகிறோம். அதன்படி, கடந்த 9-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்களை அளித்தோம். அதன்பிறகு விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர், அனைவருக்கும் சொந்தமாக வீடுகள் இருப்பதாக தவறான தகவலை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இதனால் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, அனைவருக்கும் சொந்த வீடுகள் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கூறுகிறார். அவர் கூறும் எங்களது வீடுகளை காணவில்லை. அந்த வீடுகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட நிர்வாக அலுவலரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.