கரூர்
சாலை அமைக்க வந்த அதிகாரிகளை காணவில்லை என புகார் மனு
|சாலை அமைக்க வந்த அதிகாரிகளை காணவில்லை என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் நேற்று கரூர் பசுபதிபாளையம் காமராஜ் நகர் முதல் தெரு, 19-வது வார்டு பொதுமக்கள் சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- எங்கள் தெருவிற்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந்தேதி அன்று தார் சாலை அமைக்க ஆரம்பித்தார்கள். செப்டம்பர் மாதம் 23-ந்தேதி ஆகியும் பாதி வேலை மட்டுமே முடி வடைந்த நிலையில் உள்ளது. தார் சாலை அமைக்க இன்றைய தேதி வரை யாரும் வரவில்லை.
எங்கள் தெருவில் 2 பள்ளிகள் உள்ளது. இதனால் எங்கள் தெருவில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டு தார் சாலை அமைக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்கள். இதனால் 2 குழந்தைகள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டும் உள்ளது. எனவே தார்சாலை அமைக்க வந்த அதிகாரிகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.