அரியலூர்
அரியலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் மருந்து, மாத்திரைகள் வழங்கியதற்கான ரூ.65¼ லட்சம் வழங்கவில்லை என புகார்
|அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மருந்து, மாத்திரைகள் வழங்கியதற்கான ரூ.65¼ லட்சம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் மொத்தம் ரூ.65¼ லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் வழங்கியதற்கான தொகையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 23-ந் தேதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பாக பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பிச்சை எடுக்கும் போராட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி வழங்கக்கோரி மருந்துகள் வழங்கியவர்கள் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜிடம் மனு அளித்தனர்.