புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு கட்டணம் ரூ.1 லட்சம் முறைகேடாக வசூலிக்கப்பட்டதாக புகார்
|புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் செமஸ்டர் தேர்வு கட்டணம் என்ற பெயரில் ரூ.1 லட்சம் முறைகேடாக வசூல் செய்யப்பட்ட தொகையை திருப்பி வழங்கக்கோரி முதல்வர் அறை முன்பு மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மகளிர் கல்லூரி
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் இளங்கலை வரலாற்று துறை 2-ம் ஆண்டு பிரிவில் படிக்கும் மாணவிகள் 73 பேரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செமஸ்டர் தேர்வு கட்டணம் என்ற பெயரில் தலா ரூ.775 என 2 தவணைகளாக அத்துறையை சேர்ந்த பேராசிரியைகள் வசூல் செய்துள்ளனர். ஆனால் இந்த கட்டணம் என்பதே அரசு கல்லூரியில் கிடையாது என்பது மாணவிகளுக்கு பின்பு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முறைகேடாக வசூலிக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 150-ஐ திருப்பி வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாணவிகள் தரப்பில் கல்லூரி முன்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் கல்லூரி தரப்பிலும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் கவுரவ விரிவுரையாளர் நஜ்முனிசா பேகம் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகள் தர்ணா
இதற்கிடையே ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாணவிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம் திருப்பி வழங்கப்படும் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி வழங்கக்கோரி மாணவிகள் பலர் நேற்று கல்லூரி முதல்வர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி மற்றும் பேராசிரியைகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவிகளிடம் வசூலித்த தொகையை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் திருப்பி வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பின் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
நுழைவுவாயில் கதவு மூடல்
இந்த நிலையில் மாணவிகள் போராட்டத்தினால் கல்லூரி நுழைவுவாயில் கதவு மூடப்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் கல்லூரிக்குள் செல்ல முடியாமல் வெளியே தவித்தனர். போலீசார் வந்து நுழைவுவாயில் கதவை திறக்க அறிவுறுத்திய பின் காவலாளிகள் கதவை திறந்தனர். அதன்பின் மாணவிகள் கல்லூரிக்குள் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் தரப்பில் கூறுகையில், ''மாணவிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி வழங்க பேராசிரியைகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதனை கொடுக்கவிடாமல் ஒரு பேராசிரியை தடுத்து வருகிறார். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பணம் வசூல் சம்பவத்திற்கு பின்பு கவுரவ விரிவுரையாளர் நஜ்முனிசா பேகம் கல்லூரிக்கு பணிக்கு வரவில்லை'' என்றார்.